-: பொன்னியின் செல்வன் :-
அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
வரலாற்றுப் புதினம் - Ponniyin Selvan Tamil Novels
- முதல் பாகம் - புது வெள்ளம்
- இரண்டாம் பாகம் - சுழற்காற்று
- மூன்றாம் பாகம் - கொலை வாள்
- நான்காம் பாகம் - மணிமகுடம்
- ஐந்தாம் பாகம் - தியாக சிகரம்
மூன்றாம் பாகம் - கொலை வாள்
அத்தியாயம் 25 - முதன்மந்திரி வந்தார்!
பழையாறை நகரின் வீதிகள் அன்று வரை என்றும் கண்டிராதபடி அல்லோலகல்லோலமாயிருந்தன. அத்தென்னகரில் இராஜ மாளிகைகள் இருந்த பகுதியை நோக்கி ஜனங்கள் திரள் திரளாகப் போய்க்கொண்டிருந்தார்கள். ஆண்களும், பெண்களும், வயோதிகர்களும், வாலிபர்களும், சிறுவர்களும் கூட்டம் கூட்டமாகச் சென்றார்கள். சைவர்களும் வைஷ்ணவர்களும்; பௌத்தர்களும், சமணர்களும் அக்கூட்டத்தில் கலந்திருந்தார்கள். கடும் விரதங்கள் கொண்ட காலாமுகர்கள் சிலரும் அக்கூட்டத்தில் ஆங்காங்குக் காணப்பட்டார்கள். மக்களில் அநேகர் அழுது புலம்பிக் கொண்டு சென்றார்கள். பலர் பழுவேட்டரையர்களை வாயாரச் சபித்துக் கொண்டு சென்றார்கள்.
வாலிபர்கள் சிலர் ஆங்காங்கே கையில் கழிகளுடன் காணப்பட்டார்கள். அவர்கள் அவ்வப்போது ஒருவருடைய கழியை இன்னொருவர் தட்டி ஓசைப் படுத்திக்கொண்டு சென்றார்கள். கழி அடிபடும் ஓசை கேட்டதும், “பழுவேட்டரையர்களின் தலையில் அப்படிப் போடு!” என்று சிலர் மெதுவாகச் சொன்னார்கள்; சிலர் அவ்வாறு சத்தம் போட்டும் கத்தினார்கள். சத்தம் போட்டுக் கத்தியவர்களில் காலாமுகர்கள் முக்கியமாயிருந்தார்கள்.
பழையாறையிலிருந்த முக்கியமான இராஜ மாளிகைகளின் முன் முகப்புகள் பிறைச்சந்திரன் வடிவமாக அமைந்திருந்தன. எல்லா மாளிகைகளுக்கும் சேர்ந்து முன் பக்கத்தில் விசாலமான நிலாமுற்றம் இருந்தது. விசேஷமான சந்தர்ப்பங்களில் பதினாயிரக்கணக்கான மக்கள் கூடி நிற்கும்படியாக அந்த நிலா முற்றம் விசாலமாய் இருந்தது. முற்றத்தைச் சூழ்ந்து வெளிப்புறத்தில் உயரமான மதில் சுவர் இருந்தது. அந்த மதில் சுவருக்கு மூன்று வாசல்கள் இருந்தன. ஒவ்வொரு வாசலிலும் சில அரண்மனைச் சேவகர்கள் காவல் புரிந்தார்கள்.
திரள் திரளாக வந்து கொண்டிருந்த கூட்டம் நிலாமுற்றத்தின் மூன்று வாசல்களின் அருகிலும் வந்து சேரத்தொடங்கியது. வினாடிக்கு வினாடி கூட்டம் அதிகமாகிக் கொண்டிருந்தது. செய்தி கொண்டு வந்திருந்த இருவரையும் அவர்களை அழைத்து வந்த ஊர் சேவகர்களையும் மட்டும் அரண்மனைக் காவலர்கள் உள்ளே விட்டார்கள். மற்றவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் வெகுநேரம் தடுத்து நிறுத்த முடியவில்லை. கூட்டத்தில் எங்கிருந்து கிளம்புகின்றன என்று தெரியாதபடி, சில குரல்கள் உள்ளே போங்கள்! உள்ளே போங்கள்! என்று கூவின. பின்னாலிருந்தவர்கள் முன்னாலிருந்தவர்களைத் தள்ளினார்கள். கடலின் அலைகள் ஒன்றையொன்று தள்ளிக்கொண்டு வந்து கடைசியில் பேரலையைக் கரையிலேயே போய் மோதும்படி செய்கின்றனவல்லவா? அது போலவே இந்த ஜனசமுத்திரத்திலும் நடந்தது.
முன்னாலிருந்தவர்கள் பின்னால் வந்தவர்களால் மோதப்பட்டு வாசற் காவல் புரிந்த சேவகர்களைத் தள்ளிக் கொண்டு உள்ளே புகுந்தார்கள். அவ்வளவுதான்! காவேரிக்கரையில் சிறிய உடைப்பு எடுத்தாலும் வரவரப் பெரிதாகி வெள்ளம் குபுகுபுவென்று பாய்வது போல், ஜனங்கள் நிலா முற்றத்தில் தடதடவென்று பிரவேசித்தனர். சிறிது நேரத்திற்குள் நிலா முற்றம் நிறைந்து விட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே சேர்ந்துவிட்டார்கள்.
இப்படி ஜனங்கள் கட்டுக்காவல்களை மீறி நிலா முற்றத்தில் புகுந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட ஆரவாரத்தைத்தான் செம்பியன் மாதேவி மதுராந்தகனோடு பேசிக் கொண்டிருக்கையில் கேட்டார். குமாரனுடன் வாதாடுவதை அத்துடன் நிறுத்தி விட்டு அரண்மனை மேல் மாடத்தில் முன் முகப்புக்கு வந்து சேர்ந்தார். தெய்வீகக்களை பொருந்திய அப்பெரு மூதாட்டியின் திருமுகத்தையும், கூப்பிய கைகளுடன் அவர் நின்ற சாந்தமான தோற்றத்தையும் பார்த்ததும் அந்த ஜனசமுத்திரத்தின் ஆரவாரம் அடங்கியது. சில வினாடி நேரம் அங்கே நிசப்தம் குடி கொண்டிருந்தது.
“தாயே! எங்கள் இளவரசர் எங்கே? பொன்னியின் செல்வர் எங்கே? தங்கள் கண்ணுக்குக் கண்ணான அருள்மொழி வர்மர் எங்கே?” என்று அக்கூட்டத்தில் சில குரல்கள் எழுந்தன. அவ்வளவுதான்; அந்த ஜன சமுத்திரத்தில் முன்னை விடப் பன்மடங்கு ஆரவாரம் கிளம்பிவிட்டது.
செம்பியன் மாதேவி ஒன்றும் புரியாதவராகத் திகைத்து நின்றார். ‘பழையாறை மக்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டிருந்த பொன்னியின் செல்வனுக்கு ஏதோ ஆபத்து நேர்ந்துவிட்டது’ என்பதை மட்டும் அறிந்தாள். அது என்ன ஆபத்து? எப்படி நேர்ந்தது? பழுவேட்டரையர்களே ஏதேனும் விபரீதமான காரியம் செய்து சோழ குலத்துக்கும், மதுராந்தகனுக்கும் அழியாத பழியை உண்டாக்கி விட்டார்களோ?
இச்சமயத்தில் தஞ்சாவூர் தூதர்கள் இடித்துப் பிடித்து ஜனங்களைத் தள்ளிக்கொண்டு முன்னால் வந்து சேர்ந்தார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு வந்த சேவகர்களில் ஒருவன், “பெருமாட்டி! இவர்கள் தஞ்சாவூரிலிருந்து முக்கியமான செய்தி கொண்டு வந்திருக்கிறார்கள்!” என்றான்.
செம்பியன் மாதேவி ஜனக் கூட்டத்தைப் பார்த்துக் கை அமர்த்திவிட்டுத் தூதர்களை நோக்கி, “என்ன செய்தி கொண்டு வந்தீர்கள்?” என்று கேட்டார்.
“தாயே! மிகத் துயரமான செய்தி கொண்டு வந்திருக்கும் அபாக்கியசாலிகள் நாங்கள். சக்கரவர்த்தியின் கட்டளையின் பேரில் இளவரசர் அருள்மொழிவர்மர் இலங்கையிலிருந்து கோடிக்கரைக்குக் கப்பலில் வந்து கொண்டிருந்தார்; வரும் வழியில் சுழிக்காற்றில் கப்பல் அகப்பட்டுக் கொண்டுவிட்டது. துணையாக வந்த கப்பல் உடைந்து முழுகிவிட்டது. அதிலிருந்தவர்களைக் காப்பாற்றுவதற்காக இளவரசர் கடலில் குதித்தார். பிறகு அகப்படவில்லை. கடலிலும் கடற்கரையெங்கும் தேடுவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. சக்கரவர்த்தியும், மலையமான் மகளாரும் இச்செய்தியைக் கேட்டுப் பெருந்துயரில் ஆழ்ந்திருக்கிறார்கள். தங்களையும் மதுராந்தகத் தேவரையும், இளைய பிராட்டியையும் உடனே புறப்பட்டு தஞ்சைக்கு வரும்படி சக்கரவர்த்தி எங்கள் மூலம் செய்தி அனுப்பி இருக்கிறார்!”
இவ்வாறு தூதர்கள் கூறியது செம்பியன் மாதேவியின் காதிலும் விழுந்தது. அதே சமயத்தில் ஜனக் கூட்டத்தின் செவிகளிலும் விழுந்தது. செம்பியன் மாதேவியின் கண்களில் நீர் தாரை தாரையாகப் பெருகியது. அதைப் பார்த்த ஜனங்கள் மேலும் ‘ஓ’ என்று கதறினார்கள்.
கூட்டத்தில் முன்புறம் இருந்தவர்களில் ஒருவர், “தாயே! தாங்கள் தஞ்சை போகக்கூடாது; இளையபிராட்டியும் தஞ்சைக்குப் போகக் கூடாது! சக்கரவர்த்தியை இங்கே வரும்படி செய்ய வேண்டும்” என்று கூவினார்.
“பொன்னியின் செல்வர் கடலில் முழுகிவிட்டார் என்பது பொய்; பழுவேட்டரையர்கள்தான் அவரைக் கொன்றிருப்பார்கள்!” என்றார் இன்னொருவர்.
“மதுராந்தகரும் இனித் தஞ்சைக்குப் போகக் கூடாது. இங்கேயே இருக்கவேண்டும்” என்று இன்னொரு குரல் கேட்டது.
“இளைய பிராட்டி எங்கே? அவரை நாங்கள் பார்க்க வேண்டும்!” என்று குரல்கள் கூவின.
செம்பியன் மாதேவி தம் அருகிலிருந்த சேடிகளில் ஒருத்தியைப் பார்த்து இளவரசியை அழைத்து வரச் சொன்னார்.
கீழே கூட்டத்தில் கலந்து நின்றுகொண்டிருந்த ஆழ்வார்க்கடியானும் அதே சமயத்தில் அங்கிருந்து நகர்ந்து சென்றான். பழையபடி குறுக்கு வழியில் விரைவாகச் சென்று குந்தவை தேவி வானதியை மூர்ச்சை தெளிவித்துக் கொண்டிருந்த கொடி வீட்டைக் கண்டுபிடித்தான். வந்தியத்தேவனிடம் இளையபிராட்டி கூறிய கடைசி வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டே சென்று அரண்மனை முற்றத்தில் நடக்கும் அமர்க்களத்தைப் பற்றி அறிவித்தான்.
இளைய பிராட்டி வானதிக்குச் சைத்யோபசாரம் செய்யும் வேலையைப் பணிப்பெண்களிடம் ஒப்புவித்து விட்டு, அவசரமாகக் கிளம்பினாள். இளையபிராட்டி குந்தவை தேவி அரண்மனை மேல் மாட முகப்பில் செம்பியன் மாதேவியின் அருகில் நெருங்கியபோது அந்த மூதாட்டியின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகுவதைக் கவனித்தாள். அந்தக் காட்சி குந்தவையின் கண்களிலும் கண்ணீர் பெருகச் செய்தது. இதைக் கண்ட ஜனசமூகம் மேலும் துயர சாகரத்தில் மூழ்கியது.
“பொன்னியின் செல்வர் கடலில் மூழ்கவில்லை. பழுவேட்டரையர்கள் கொன்று விட்டார்கள். அவர்களைப் பழிக்குப் பழி வாங்க வேண்டும்!”
“சக்கரவர்த்தியைப் பழுவேட்டரையர்கள் சிறையில் வைத்திருக்கிறார்கள். அவரை விடுவித்து அழைத்து வர வேண்டும். இளவரசி கட்டளையிட்டால் இந்தக் கணமே நாங்கள் புறப்படச் சித்தமாயிருக்கிறோம்.”
இவ்வாறெல்லாம் அந்தக் கூட்டத்திலிருந்தவர்கள் இளைய பிராட்டியைப் பார்த்துக் கூறினார்கள்.
குந்தவையின் மனம் தீவிரமாகச் சிந்தித்தது. இளவரசர் உயிரோடிருக்கிறார் என்ற உண்மையை இப்பொழுது வெளியிடக் கூடாது. ஆனால் ஜனங்களையும் சமாதானப்படுத்தி அனுப்ப வேண்டும். அதற்கு ஒரு வழி தோன்றியது.
கண்ணில் பெருகிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, ஜனக் கூட்டத்தின் முன்வரிசையில் நின்றவர்களை இளவரசி நோக்கினாள். அதற்குள் ஆழ்வார்க்கடியானும், வந்தியத்தேவனும் அங்கே வந்து நின்று கொண்டிருந்தார்கள். ஆழ்வார்க்கடியானைப் பார்த்து இளையபிராட்டி மேலே வரும்படி சமிக்ஞை செய்தாள். ஆழ்வார்க்கடியான் அவ்விதமே மேலே ஏறிச் சென்றான். அவனிடம் குந்தவை மெல்லிய குரலில் ஏதோ கூறினாள்.
ஆழ்வார்க்கடியான் ஜனங்களைப் பார்த்துக் கையமர்த்தினான். இடி முழக்கம் போன்ற பெரிய குரலில் கூறினான்:
“பொன்னியின் செல்வர் இறந்திருப்பார் என்று இளைய பிராட்டியினால் நம்ப முடியவில்லை. முன்னொரு சமயம் காவேரித்தாய் இளவரசரை ஏந்திக் காப்பாற்றியதுபோல் சமுத்திர ராஜனும் அவரைக் காப்பாற்றியிருப்பான் என்று நம்புகிறார். நிமித்தக்காரனைக் கேட்டதில் அவனும் அப்படியே சொல்கிறானாம். இளவரசரைத் தேடிக் கண்டுபிடிக்க இளைய பிராட்டி தக்க ஏற்பாடு செய்வார். உங்களையெல்லாம் நிம்மதியாக வீட்டுக்குத் திரும்பிப் போகும்படி கேட்டுக் கொள்கிறார்!”
இதைக் கேட்டதும் அந்த ஜனக் கூட்டத்தில் ஒரு பெரிய ஆசுவாச நெடுமூச்சைப் போன்ற சத்தம் எழுந்தது.
“நிமித்தக்காரன் எங்கே? அவன் வாயினால் நாங்களும் அந்த நல்ல செய்தியைக் கேட்கிறோம்” என்றார் ஒருவர்.
இதுதான் சமயம் என்று வந்தியத்தேவன் தாவிக் குதித்து மேல் மாடத்துக்குச் சென்றான். ஆழ்வார்க்கடியான் அருகில் போய் நின்றுகொண்டு “இளவரசருக்குப் பெரிய கண்டம் நேர்ந்தது உண்மைதான். ஆனால் அவருடைய உயிருக்கு அபாயம் ஒன்றும் நேரவில்லை; விரைவில் கிடைத்து விடுவார்!” என்றான்.
“உனக்கு எப்படி தெரியும்?” என்றது ஒரு குரல்.
“நான் நிமித்தக்காரன்; கிரகங்களையும் நட்சத்திரங்களையும் பார்த்து அறிந்து கொண்டேன்; நிமித்தங்களைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன்.”
“பொய்! நீ சொல்வது பொய்! நீ நிமித்தக்காரன் அல்ல! நீ ஒற்றன்!” என்றது அதே குரல்.
வந்தியத்தேவன் அந்தக் குரலுக்கு உரியவனைக் கவனித்துப் பார்த்தான். அவன் வைத்தியர் மகன் என்பதை அறிந்து கொண்டான்.
“பைத்தியக்காரா! என்னையா ஒற்றன் என்று சொல்லுகிறாய்? நான் ஒற்றனாயிருந்தால், யாருடைய ஒற்றன்?” என்று கேட்டான்.
“பழுவேட்டரையர்களுடைய ஒற்றன்” என்று வைத்தியர் மகன் பளிச்சென்று மறுமொழி கூறினான்.
“என்ன சொன்னாய்?” என்று வந்தியத்தேவன் கர்ஜித்தான்.
ஜனங்கள் கீழே நின்ற நிலா முற்றத்திலிருந்த வந்தியத்தேவன் நின்ற மேல் மாடம் பன்னிரண்டு அடி உயரத்தில் இருந்தது. அதை அவன் பொருட்படுத்தாமல் மேல் மாடத்திலிருந்து வைத்தியர் மகன் பேரில் பாய்ந்தான். இருவருக்கும் துவந்த யுத்தம் ஆரம்பமாயிற்று. சண்டை என்றால் எல்லாருக்கும், எல்லாக் காலத்திலும் வேடிக்கை பார்ப்பதில் பிரியம் உண்டு அல்லவா?
வந்தியத்தேவனுக்கும், வைத்தியர் மகனுக்கும் சண்டை நடந்த இடத்தைச் சுற்றி இடைவெளி விட்டு ஜனங்கள் வட்டவடிவமாக நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். மேல் மாடத்தில் இருந்தவர்கள் கவலையுடன் அதை நோக்கினார்கள். ஜனக்கூட்டதில் பெரும்பாலோர் விஷயம் இன்னதென்று தெரிந்து கொள்ளாமலே முன்னைவிட அதிகக் கூச்சல் போடத் தொடங்கினார்கள்.
இச்சமயத்தில் வாசற் பக்கத்திலிருந்து சங்கநாதமும் கொம்புகளின் முழக்கமும் கேட்டன.
“முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மராயர் வருகிறார் வழிவிடுங்கள்!” என்ற குரல் முழக்கமும் கேட்டது.
அந்தப் பெருங்கூட்டத்தில் முதன் மந்திரிக்குத் தானாகவே வழி ஏற்பட்டது.