-: பொன்னியின் செல்வன் :-
அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
வரலாற்றுப் புதினம் - Ponniyin Selvan Tamil Novels
- முதல் பாகம் - புது வெள்ளம்
- இரண்டாம் பாகம் - சுழற்காற்று
- மூன்றாம் பாகம் - கொலை வாள்
- நான்காம் பாகம் - மணிமகுடம்
- ஐந்தாம் பாகம் - தியாக சிகரம்
முதல் பாகம் - புது வெள்ளம்
அத்தியாயம் 46 - மக்களின் முணுமுணுப்பு
சோழகுல மூதாட்டியின் சந்நிதியிலிருந்து ஆழ்வார்க்கடியான் இளையபிராட்டியின் மாளிகைக்குப் புறப்பட்டுச் சென்றான். வழியில் பழையாறை வீதிகளில் கண்ட காட்சிகள் அவனுக்கு மிக்க உற்சாகத்தை அளித்தன. கண்ணன் பிறந்த திருநாளை இந்த ஜனங்கள் எவ்வளவு குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள்? வைஷ்ணவம் இந்தச் சோழ நாட்டில் நிலைத்து நின்று பரவப் போகிறது என்பதில் ஐயம் இல்லை. சைவ சமயத்துக்கு இங்கே செல்வாக்குப் பெருகுவதற்குப் பல காரணங்கள் உண்டு. நூறு வருஷ காலமாகச் சோழ குலத்து மன்னர்கள் புதிய புதிய சிவாலயங்களை நாடெங்கும் நிர்மாணித்து வருகிறார்கள். மூவர் பாடிய தேவாரப் பாசுரங்கள் அக்கோயில்களின் மூலமாகப் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றன. சிவாலயங்களில் தேர்த் திருவிழாக்கள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. இப்படியெல்லாமிருந்தும் திருமாலின் பெருமைக்கு யாதொரு குறையும் ஏற்படவில்லை. விஷ்ணுமூர்த்தியின் ஒன்பதாவது பரிபூரண அவதாரமாகிய கண்ணன், மக்களின் இதயத்தைக் கவர்ந்து விட்டான். கோகுலத்திலும் பிருந்தாவனத்திலும் வட மதுரையிலும் எம்பெருமான் நிகழ்த்திய லீலைகள் இவர்களுடைய உள்ளத்தில் குடிகொண்டு விட்டன. அம்மம்மா! எத்தனை பாகவத கோஷ்டிகள்! எத்தனை வீதி நாடகங்கள்! எத்தனை விதவிதமான வேஷங்கள்! – ஆம்; முன்னம் நாம் பார்த்ததைக் காட்டிலும் இப்போது அதிகமாகவே இருந்தன. கோஷ்டிகளைச் சூழ்ந்து நின்று வேடிக்கை பார்ப்போரின் கூட்டமும் ஆரவாரமும் கூட அதிகமாகவே இருந்தன. பழையாறையைச் சுற்றிலுமிருந்த கிராமங்களிலிருந்து புதிய புதிய நாடக கோஷ்டியினர் வந்து கொண்டேயிருந்தார்கள்.
நாடக கோஷ்டி ஒன்றில் வஸுதேவர், தேவகி, கிருஷ்ணன், பலராமன், கம்ஸன் ஆகியவர்கள் வேஷம் தரித்துக் கொண்டு வந்தார்கள். பாட்டும், கூத்தும், வேஷக்காரர்களின் பேச்சும் இந்தக் கோஷ்டியில் அதிகமாயிருந்தபடியால் ஆழ்வார்க்கடியான் சற்று நின்று கவனித்தான். அப்போது கிருஷ்ணனுக்கும், கம்ஸனுக்கும் சம்வாதம் நடந்து கொண்டிருந்தது. கிருஷ்ணன் வேஷம் பூண்டிருந்தவன் சிறு பிள்ளை. அவன் மழலைச் சொல்லினால் கம்ஸன் செய்த குற்றங்களை எடுத்துக் கூறி, “வா, என்னோடு சண்டைக்கு!” என்று அழைத்தான். அதற்குக் கம்ஸன் உரத்த இடிமுழக்கக் குரலில், “அடே! கிருஷ்ணா! உன் மாயாவித்தனமெல்லாம் இனி என்னிடம் பலிக்காது. உன்னை இதோ கொல்லப் போகிறேன். உன் அண்ணன் பலராமனையும் கொல்லப் போகிறேன். உன் அப்பன் வஸுதேவனையும் கொல்லப் போகிறேன். அதோ நிற்கிறானே, உடம்பெல்லாம் சந்தனத்தைக் குழைத்து நாமமாகப் போட்டுக் கொண்டு – அந்த வீர வைஷ்ணவனையும் கொன்று விடப் போகிறேன்!” என்று கூறியதும், சுற்றிலும் நின்றவர்கள் எல்லாரும் நமது ஆழ்வார்க்கடியானைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்கினார்கள். கிருஷ்ணன், பலராமன் வேஷம் போட்டிருந்தவர்கள் கூட அவனை நோக்கினார்கள். கூட்டத்தில் பலர் அவனை நெருங்கி வந்து சூழ்ந்து கொண்டு ‘கெக் கெக்கே’ என்று சிரிக்கவும் கேலி செய்யவும் ஆரம்பித்தார்கள்.
திருமலை நம்பிக்குக் கோபம் பிரமாதமாக வந்தது. கையிலிருந்த தடியைச் சுழற்றி அக்கூட்டத்திலிருந்தவர்களை ஒரு கை பார்த்துவிடலாமா என்று எண்ணினான். முக்கியமாக, அந்தக் கம்ஸனுடைய தலையில் ஒரு போடு போட விரும்பினான். ஆனால் கம்ஸனுடைய தலையில் அடிப்பதில் பயனில்லை. ஏனெனில் அவனுடைய சொந்த முகத்தை மறைத்துக் கொண்டு மரத்தினால் செய்து கோரமான மீசையும் கோரைப் பற்களும் வைத்து வர்ணத்தினால் எழுதியிருந்த பொய்த் தலையைக் கம்ஸ வேடக்காரன் வைத்திருந்தான். மொத்தத்தில் இவ்வளவு பெரிய கூட்டத்தில் தடியை உபயோகிப்பது நல்லதல்ல என்று திருமலை தீர்மானித்து அவ்விடத்தை விட்டு நழுவிச் சென்றான். அந்தக் கம்ஸனுடைய குரல், — வேண்டுமென்று பெருங்குரலில் அவன் கத்தியபோதிலும் -எங்கேயோ கேட்ட குரலாக ஆழ்வார்க்கடியானுக்குத் தோன்றியது. அது எங்கே கேட்ட குரல் என்று யோசித்துக் கொண்டே அவன் வீதியோடு நடந்தான்.
ஜனங்களின் குதூகலத்தில் திடீரென்று ஒரு மாறுதல் ஏற்பட்டது. போகப் போக மக்களின் உற்சாகக் குறைவு வெளிவாகப் புலப்பட்டது. இது என்ன? திடீரென்று ஏன் இந்த மாறுதல்? ஜனக் கூட்டம் ஏன் இவ்வளவு விரைவாகக் கலைந்து கொண்டிருக்கிறது? வாத்திய முழக்கங்களும் ஆடல் பாடல் சப்தங்களும் நின்று விட்டன…! அதற்குப் பதிலாக ஜனங்கள் வீதி ஓரங்களில் ஒதுங்கிச் சிறு சிறு கும்பலாக நின்று என்ன இரகசியம் பேசுகிறார்கள்? பேசிவிட்டு ஏன் விரைந்து நடக்கிறார்கள்? வீட்டுக் கதவுகள் ஏன் தடால் தடால் என்று சாத்தப்படுகின்றன?
இதோ காரணம் தெரிகிறது. குந்தவைப் பிராட்டிக்கு கூட உடல் நடுக்கத்தை உண்டுபண்ணிய பறை முழக்கமும், ஒற்றனைப் பிடித்துக் கொடுப்பது பற்றிய அறைகூவலும்தான் காரணம். இந்தப் பறை முழக்கம் அவ்வளவு தூரம் திருவிழாக் கொண்டாட்டத்துக்காகக் கூடியிருந்த மக்களின் குதூகலத்தைப் பாழ்படுத்தி விட்டது. தனியாகப் போகிறவர்களை மற்றவர்கள் உற்றுப் பார்த்துக் கொண்டு போனார்கள்! தெரியாத வேற்று முகங்களையெல்லாம் சந்தேகத்துடன் பார்த்தார்கள். ஆழ்வார்க்கடியானைக் கூடச் சிலர் அவ்விதம் ஐயப்பாடு உள்ள பார்வையுடன் பார்த்துவிட்டு அவசரமாக மேலே சென்றார்கள்.
இதன் காரணத்தைத் திருமலை ஊகித்து அறிந்து கொண்டான். அது மட்டும் அல்ல. ஜனங்கள் சிறு சிறு கும்பலாக வீதி ஓரங்களில் நின்று பேசுவது என்னவென்பதும் அவனுக்கு ஒருவாறு ஊகத்தினால் தெரிந்திருந்தது. காதில் விழுந்த சிற்சில வார்த்தைகளினால் அது உறுதியாயிற்று. பழுவேட்டரையர்களின் கொடுங்கோல் ஆட்சியைப் பற்றியே அந்த ஜனங்கள் பேசினார்கள். பழையாறை நகர மாந்தருக்கும் சுற்றுப்புறத்துக் கிராமவாசிகளுக்கும் பழுவேட்டரையர்களின் பேரில் கோபம் இருப்பது இயற்கைதான்.
யாவரொப்பார்கள் இத்தொன்னிலத்தே!” </div>
என்று கவிவாணர்களினால் புகழ்ந்து பாடப்பட்ட சக்கரவர்த்தியைப் பழையாறையிலிருந்து அவர்கள் தஞ்சைக்குக் கொண்டு போய் விட்டார்கள் அல்லவா? அதுமுதலாவது பழையாறையின் சிறப்பு நாளுக்கு நாள் குறைவுபட்டு வருகிறதல்லவா? இன்றைக்கு இந்தக் கிருஷ்ண ஜெயந்தி விழாவன்று சக்கரவர்த்தி மட்டும் இந்நகரில் இருந்தால், இன்னும் எவ்வளவு கோலாகலமாக இருக்கும்? கண்ணன் கதை சம்பந்தமான வேடம் புனைந்து வரும் நாடக கோஷ்டிகள் எல்லாம் நகரத்தின் வீதிகளில் சுற்றி விட்டுச் சக்கரவர்த்தியின் அரண்மனை முற்றத்தில் வந்து கூடும் அல்லவா? நடிகர்களுக்கும் பாட்டில் வல்லவர்களுக்கும் பாணர்களுக்கும் பாடினிகளுக்கும் புலவர்களுக்கும் சக்கரவர்த்தி வெகுமதி அளிப்பார் அல்லவா? சோழ நாடே பழையாறைக்குத் திரண்டு வந்து விட்டது என்று கூறும்படி ஜனத்திரள் சேர்ந்திருக்கும் அல்லவா! கடை கண்ணிகளில் வியாபாரம் இதை விட நூறு மடங்கு அதிகம் நடந்திருக்கும் அல்லவா? இரவு நந்திபுர விண்ணகரக் கோவிலிலிருந்து வேணுகோபால சுவாமி புறப்பட்டு வீதி வலம் வரும்போது எவ்வளவு மேளமும் தாளமும் ஆட்டமும் பாட்டமும் சிலம்ப விளையாட்டுக்களும் கத்திச் சண்டைகளும் திமிலோகப்படும்?
அவ்வளவும் இந்தப் பழுவேட்டரையர்களினால் இல்லாமற் போய் விட்டது. இதைத் தவிர இன்னொரு பெருங்குறையும் பழையாறை மக்களின் உள்ளங்களில் குடிகொண்டிருந்தது.அவர்களுடைய கண்ணுக்குக் கண்ணான இளவரசர் அருள்மொழிவர்மர் கடல் கடந்து சென்று இலங்கைத் தீவில் போர் புரிந்து வருகிறார். பழையாறையின் நாலு படை வீட்டுப் பகுதிகளையும் சேர்ந்த பதினாயிரம் வீரர்கள் இளவரசர் தலைமையில் ஈழநாடு சென்றிருக்கிறார்கள். காடும் மலையும் நிறைந்த அந்நாட்டில் தமிழகத்தின் மானத்தையும் வீரப் பண்பையும் நிலைநாட்டுவதற்காக அவர்கள் போர் புரிந்து வருகிறார்கள். கொடும்பாளூர் இளங்கோ அந்த ஈழ நாட்டுக்குப் படையெடுத்துச் சென்று போர்க்களத்தின் முன்னிலையில் நின்று, மார்பில் வேலைத் தாங்கி உயிரை விடவில்லையா? எஞ்சியிருந்த சோழ வீரர்கள் அத்தனை பேரும் இறுதிவரை போரிட்டு மடியவில்லையா? அப்படி இறந்தவர்களின் ஆவிகள் அமைதியுறும் பொருட்டு மீண்டும் புலிக் கொடியின் வெற்றியை அந்த ஈழத் தீவில் நிலைநாட்டுவதற்காகவே இளவரசர் அருள்மொழித் தேவர் சென்றிருக்கிறார். அவருடைய தலைமையில் போரிடும் நம் வீரர்களுக்கு இந்தப் பழுவேட்டரையர்கள் உணவும் துணியும் பணமும் ஆயுதமும் அனுப்ப மறுக்கிறார்களாமே? இது என்ன அநியாயம்? இப்படியும் உண்டா? தஞ்சாவூர்க் கோட்டையில் உள்ள தானியக் களஞ்சியங்களில் ஏராளமாக நெல்லை நிரப்பி வைத்திருக்கிறார்களே? அவ்வளவும் என்னத்திற்கு? நூறு ஆண்டு காலமாக அரண்மனைப் பொக்கிஷங்களில் சேர்ந்திருக்கும் பணந்தான் எதற்கு? இந்தச் சமயத்தில் நம்முடைய வீரர்களுக்குப் பயன்படாத தனமும் தானியமும் என்னத்திற்கு? எல்லாவற்றையும் இந்தப் பழுவேட்டரையர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? சாகும்போது யமலோகத்திற்குத் தங்களுடன் கொண்டு போகப் போகிறார்களா…?
இப்படியெல்லாம் சில காலமாகவே சோழ நாட்டு மக்கள் முணுமுணுத்துக் கொண்டிருந்தது திருமலை நம்பிக்குத் தெரிந்திருந்த விஷயந்தான். அதிலும் பழையாறை மக்களுக்கு இது விஷயமாகக் கோபம் அதிகமாக இருப்பதும் இயற்கையே. ஈழநாட்டுப் போர்க்களத்துக்குச் சென்றிருக்கும் பதினாயிரம் வீரர்களின் பெண்டு பிள்ளைகளும் உற்றார் உறவினரும் இந்த மாநகரில் இன்னும் வசித்து வருகிறார்கள் அல்லவா?
ஆகவே, பழுவேட்டரையர்களின் கட்டளையின் பேரில், குற்றம் செய்துவிட்ட ஒற்றனைப் பற்றிப் பறை முழங்கி அறைகூவியதைப் பழையாறை மக்கள் விரும்பவில்லை. பழுவேட்டரையர்கள் மீது தங்களுக்குள்ள குறைகளைப் பற்றிப் பேசிக் கொள்வதற்கு அது ஒரு காரணமாயிற்று. ஒற்றனாம் ஒற்றன்! எந்த நாட்டிலிருந்து ஒற்றன் இங்கே வந்து விடப் போகிறான்! குமரி முனையிலிருந்து வடபெண்ணை வரையில்தான் புலிக்கொடி பறந்து வருகிறதே! ஒற்றனை அனுப்பும்படியாக வேற்றரசன் யார் அவ்வளவு பலசாலியாக இருக்கிறான்? இந்தப் பழுவேட்டரையர்களுக்குப் பிடிக்காதவன் யாராவது இருந்தால் அவன் பேரில் ஒற்றன் என்று குற்றம்சாட்டி வேலை தீர்த்து விடுவார்கள்! அல்லது பாதாளச் சிறையில் தள்ளி விடுவார்கள்!…. இருந்தாலும் நமக்கென்னத்துக்கு வம்பு? அதிகாரம் அவர்களுடைய கையில் இருக்கிறது! நியாயம் அநியாயம் எது வேணுமானாலும் செய்வார்கள்! ஒற்றன் என்ற பட்டத்தைச் சூட்டி விட்டால், ஊர்ப் பஞ்சாயத்துக்களைக் கூடக் கேட்க வேண்டியதில்லை அல்லவா..?
இப்படியெல்லாம் பழையாறை மக்கள் மனத்தில் நினைத்ததையும் வாயினால் முணுமுணுத்ததையும் ஒருவருக்கொருவர் மெல்லிய குரலில் பேசிக் கொண்டதையும் ஆழ்வார்க்கடியான் செவிப் புலன் வழியாகவும் மதி ஊகத்தினாலும் தெரிந்து கொண்டான்.
இவ்வாறு மக்களின் மனத்தில் புகைந்து வரும் அதிருப்தி எதில் போய் முடியப் போகிறதோ என்று சிந்தித்துக் கொண்டே குந்தவை தேவியின் மாளிகையை அடைந்தான்.
ஆழ்வார்க்கடியானிடம் உலக நடப்பைக் குறித்துப் பேசுவதில் இளையபிராட்டிக்கு எப்போதும் விருப்பம் உண்டு. நாடு நகரமெல்லாம் திரிந்து அவன் ஆங்காங்கு நடக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வருவான். அதையெல்லாம் அறிந்து கொள்ளுவதில் அரசிளங்குமரி ஆவல் கொண்டாள். அவன் தேடிக் கொண்டு வந்து பாடிக் காட்டும் ஆழ்வார் பாசுரங்களைக் கேட்பதிலும் இளையபிராட்டிக்குப் பிரியம் உண்டு. ஆகையால் திருமலை நம்பி எப்போது வந்தாலும் ஆர்வத்துடன் வரவேற்பாள். முகமலர்ச்சியுடன் அவனிடம் யோக க்ஷேமங்களைப் பற்றி விசாரிப்பாள்.
ஆனால் இன்றைக்கு இளவரசியின் முகபாவத்திலும் பேச்சிலும் சிறிது மாறுதல் தோன்றியதை ஆழ்வார்க்கடியான் கண்டான். மனது எங்கேயோ எதிலேயோ ஈடுபட்டிருப்பதைக் காட்டும் முகபாவம்; பேச்சில் இயற்கைக்கு மாறான ஒரு பரபரப்பு; கொஞ்சம் தடுமாற்றம்.
“திருமலை! என்ன விசேஷம்? எங்கே வந்தாய்?” என்று குந்தவை கேட்டாள்.
“விசேஷம் ஒன்றுமில்லை, தாயே! வழக்கம் போல் தாங்கள் உலக நடப்பைக் குறித்து விசாரிப்பதற்கு வரச் சொன்னதாக நினைத்துக் கொண்டு வந்தேன். மன்னிக்க வேண்டும் போய் வருகிறேன்”.
“இல்லை, இல்லை! கொஞ்சம் இருந்து விட்டுப் போ! நான்தான் உன்னை வரும்படி சொன்னேன்…”
“தாயே! சொல்ல மறந்து விட்டேன்! சற்று முன் பெரிய பிராட்டியின் சந்நிதியில் இருந்தேன். தங்களிடம் ஏதோ முக்கியமான செய்தி சொல்ல வேண்டுமாம் தங்களை வரும்படி சொல்லச் சொன்னார்கள்…”
“ஆகட்டும்; நானும் போகத்தான் எண்ணியிருக்கிறேன் நீ இந்தப் பிரயாணத்தில் எங்கெங்கே போயிருந்தாய்? அதைச் சொல்லு!”
“தென் குமரியிலிருந்து வட வேங்கடம் வரையில் போயிருந்தேன்.”
“போன இடங்களில் ஜனங்கள் என்ன பேசிக் கொள்ளுகிறார்கள்?”
“சோழ குல மன்னர் குலத்தின் பெருமையைப் பற்றிப் பேசிக் கொள்கிறார்கள். இன்னும் சில காலத்தில் வடக்கே கங்கா நதி வரையிலும், ஹிமோத்கிரி வரையிலும் சோழ மகாராஜ்யம் பரவி விடும் என்று பேசிக் கொள்கிறார்கள்……”
“அப்புறம்?”
“பழுவேட்டரையர்களின் வீரப் பிரதாபங்களைப் பற்றியும் பாராட்டிப் பேசுகிறார்கள். சோழ சாம்ராஜ்யம் இவ்வளவு உன்னத நிலைமையை அடைந்ததற்குக் காரணமே பழுவூர்ச் சிற்றரசர்களின்…..”
“போதும், இன்னும் என்ன சொல்லுகிறார்கள்?”
“தங்களுடைய சகோதரர்கள் இருவரையும் பற்றி ஆசையோடு பேசிக் கொள்கிறார்கள். முக்கியமாக இளவரசர் அருள்மொழிவர்மர் மீது குடிமக்களுக்கு இருக்கும் அன்பையும் ஆதரவையும் சொல்லி முடியாது.”
“அதில் ஒன்றும் வியப்பில்லைதான்! இன்னும் ஏதேனும் பேச்சு உண்டா?”
“சோழ மகா சக்கரவர்த்தியின் திருக்குமாரிக்கு ஏன் இன்னும் திருமணம் ஆகவில்லையென்று பேசிக் கொள்கிறார்கள். என்னைக் கூடப் பலரும் கேட்டார்கள்……”
“நீ என்ன மறுமொழி சொன்னாய்?”
“எங்கள் இளையபிராட்டியை மணந்து கொள்ளத் தகுதி வாய்ந்த அரசகுமாரன் இன்னும் இந்தப் பூவுலகில் பிறக்கவில்லை என்று சொன்னேன்…….”
“அழகாயிருக்கிறது! இனிமேல் அப்படிப்பட்டவன் பிறக்க வேண்டுமாக்கும்! அவன் பிறந்து கல்யாண வயதை அடைவதற்கு முன்னால் நான் கிழப்பாட்டி ஆகிவிடுவேன்! என் விஷயம் இருக்கட்டும் திருமலை! வேறு ஏதாவது பேச்சு உண்டா?”
“ஏன் இல்லை? சிவஞான யோகீசுவரராகப் போவதாய்ச் சொல்லிக் கொண்டிருந்தத் தேவர் திடீரென்று கலியாணம் செய்து கொண்டதைப் பற்றிப் பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்……”
“உன் அருமைச் சகோதரி…ஆண்டாளைப் போன்ற பக்த சிரோமணி ஆகப் போவதாகச் சொல்லிக் கொண்டிந்தாயே…அவள் இப்பொழுது எப்படியிருக்கிறாள்?”
“அவளுக்கு என்ன குறைவு தாயே! பெரிய பழுவேட்டரையரின் அரண்மனையில் சர்வாதிகாரிணியாக ஆட்சி செலுத்தி வருகிறாள்…”
“பழுவேட்டரையரின் அரண்மனையில் மட்டும்தானா? இந்தச் சோழ ராஜ்யத்துக்கே அவள்தான் சர்வாதிகாரிணி என்றல்லவா கேள்விப்பட்டேன்..!”
“அப்படியும் சிலர் பேசிக் கொள்கிறார்கள் தாயே! ஆனால் அவளை விட்டுத் தள்ளுங்கள். இந்த நல்ல நாளில் அவளுடைய பேச்சு எதற்கு? தாங்கள் ‘ஆண்டாள்’ பெயரைக் குறிப்பிட்டதால், எனக்கு ஒன்று ஞாபகம் வருகிறது. ஸரீவில்லிபுத்தூருக்குப் போயிருந்தேன். பட்டர் பிரான் விஷ்ணு சித்தரின் பாடல்கள் சிலவற்றைத் தெரிந்து கொண்டேன். இதைக் கேளுங்கள், அம்மா! கண்ணன் பிறந்த திருநாளைப் பற்றிய பாடல்:-
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்தன றாயிற்றே!
ஓடுவார் விழுவார் உகந்தாலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே!’ </div>
இன்றைக்கு நம் பழையாறை நகரமும் ஆயர்பாடி போலவே ஒரே குதூகலமாயிருக்கிறது, தாயே!”
“குதூகலமாயிருக்கிறது சரிதான்; ஆனால் சற்று முன்னால் வேறொரு விதமான பறை கொட்டிற்றே, அது என்ன திருமலை?”
இந்தக் கேள்விக்காகவே ஆழ்வார்க்கடியான் காத்துக் கொண்டிருந்தான்.
“யாரோ ஒற்றனாம்! தப்பித்துக் கொண்டானாம்! அவனைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பரிசு கொடுப்பார்களாம்! அதையெல்லாம் பற்றி நான் என்ன கண்டேன் தாயே!”
“உனக்கு ஒன்றும் தெரியாதா? யாராயிருக்கும் என்பது பற்றிச் சந்தேகம் கூட இல்லையா?”
“மனத்தில் ஒரு சந்தேகம் இருக்கிறது ஆனால் அதைப் பற்றிப் பேசுவது அபாயம். தெரு வீதியில் நான் நடந்து வந்த போது என்னைக் கூடச் சிலர் முறைத்துப் பார்த்துக் கொண்டு போனார்கள். என்னை யாரேனும் பிடித்துக் கொண்டு போய்ப் பாதாளச் சிறையில் போட்டு விட்டால்…….?”
“உன்னைப் பிடிப்பதற்குத் தலையில் கொம்பு முளைத்தவர்களாயிருக்க வேண்டும்! உன் மனத்தில் தோன்றியதை என்னிடம் சொல்லலாம் என்றால் சொல்! நான் உன்னைக் காட்டிக் கொடுத்து விடுவேன் என்ற எண்ணம் இல்லையே?”
“கிருஷ்ணா! கிருஷ்ணா! அப்படியெல்லாம் ஒன்றுமில்லை வீரநாராயணபுரத்தில் ஒரு வீர வாலிபனைப் பார்த்தேன். அவன் தஞ்சாவூர் போகிறதாகச் சொன்னான். எதற்காகவென்று சொல்லவில்லை. என்னைப் பல கேள்விகள் கேட்டான்…….”
குந்தவை பரபரப்புடன், “அவன் எப்படியிருந்தான்?” என்றாள்.
“பெரிய குலத்தில் பிறந்தவனைப் போல் காணப்பட்டான். முகம் களையாயிருந்தது. ஊக்கமும் உள்வலியும் கொண்டவன் என்று தெரிந்தது……..”
“உன்னிடம் என்ன கேட்டான்?”
“சக்கரவர்த்தியின் உடல் நிலைமையைப் பற்றிக் கேட்டான். அடுத்தபடி பட்டத்துக்கு வர வேண்டியவரைப் பற்றிக் கேட்டான். இலங்கை சென்றிருக்கும் இளவரசரைப் பற்றிக் கேட்டான்.பிற்பாடு, குடந்தை ஜோதிடரிடமும் அதே கேள்விகளைக் கேட்டதாக அறிந்தேன்……”
“ஆகா! குடந்தை ஜோதிடர் வீட்டுக்கு அவன் வந்திருந்தானா?”
“இப்போது ஞாபகம் வருகிறது. தாங்கள் ஜோதிடரின் வீட்டில் இருந்த போதே அவன் தடபுடல் செய்து கொண்டு உள்ளே வந்து விட்டானாம்…….. நல்லவேளையாகத் தங்களை அவன் தெரிந்து கொள்ளவில்லையாம்…!”
“நான் நினைத்தது சரியாய்ப் போயிற்று……”
“என்ன தாயே நினைத்தீர்கள்?”
“அந்த முரட்டு வாலிபனுக்குச் சீக்கிரம் ஏதாவது ஆபத்து வரலாம் என்று நினைத்தேன்……”
“தாங்கள் நினைத்தது சரிதான். அவன்தான் ஒற்றன் என்று சந்தேகிக்கிறேன். அவனைப் பிடிப்பதற்குத்தான் பழுவேட்டரையர்கள் பரிசு கொடுப்பதாகப் பறையடித்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.”
“திருமலை! எனக்கு ஓர் உதவி செய்வாயா?”
“கட்டளையிடுங்கள் தாயே!”
“அந்த வாலிபனை நீ எப்போதாவது பார்க்க நேர்ந்தால்………”
“பிடித்துக் கொடுத்துப் பரிசு பெற்றுக் கொள்ளட்டுமா?”
“வேண்டாம், வேண்டாம்! என்னிடம் அழைத்துக் கொண்டு வா! அவனிடம் எனக்கு முக்கியமான காரியம் ஒன்று இருக்கிறது.”
ஆழ்வார்க்கடியான் அதிசயம் அடைந்தவனைப் போல் சிறிது நேரம் குந்தவைப் பிராட்டியைப் பார்த்துக் கொண்டு நின்றான். பின்னர், “அதற்கு அவசியம் ஏற்படாது, தாயே! நான் அவனைத் தேடிப் பிடித்து வர அவசியம் நேராது. அவனே தங்களைத் தேடிக் கொண்டு வந்து சேருவான்!” என்றான்.