-: பொன்னியின் செல்வன் :-
அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி

வரலாற்றுப் புதினம் - Ponniyin Selvan Tamil Novels


  1. முதல் பாகம் - புது வெள்ளம்
  2. இரண்டாம் பாகம் - சுழற்காற்று
  3. மூன்றாம் பாகம் - கொலை வாள்
  4. நான்காம் பாகம் - மணிமகுடம்
  5. ஐந்தாம் பாகம் - தியாக சிகரம்

முதல் பாகம் - புது வெள்ளம்

அத்தியாயம் 52 - கிழவன் கல்யாணம்

மாமல்லபுரத்துக் கடற்கரையில் சிறிய சிறிய கற்பாறைகள் பல உண்டு. சில சமயம் கடல் பொங்கி வந்து அப்பாறைகளின் மீது அலைகள் மோதிக் கொண்டிருக்கும். சில சமயம் கடல் பின்வாங்கிச் சென்று அப்பாறைகள் உலருவதற்கு அவகாசம் அளிக்கும். அவற்றில் ஒரு சிறிய பாறையையேனும் மாமல்லபுரத்து மகா சிற்பிகள் சும்மா விட்டுவிடவில்லை. அந்தந்தப் பாறைக்குத் தகுந்தபடி பெரிதாகவும் சிறிதாகவும் காட்சிகளைக் கற்பனை செய்து அழியாச் சிற்ப உருவங்களை அமைத்து வைத்தார்கள்.

அவ்விதம் சிறிய பாறைகள் இரண்டு எதிரெதிராக அமைந்திருந்த இடத்தை ஆதித்த கரிகாலனும் மற்ற இருவரும் அணுகினார்கள். ரதத்திலிருந்து இறங்கிச் சென்றார்கள். இரண்டு பாறைகளையும் இரண்டு சிம்மாசனங்களாகக் கருதி, கரிகாலனும் மலையமானும் அமர்ந்தார்கள். பார்த்திபேந்திரன் அவர்களுக்குச் சற்று அப்பால் நின்றான். அடிக்கடி அலைகள் வந்து அவர்களுடைய முழங்கால் வரையில் நனைத்துக் கொண்டிருந்தன. அலைகள் பாறைகளில் மோதியபோது எழுந்த திவலைகள் சில சமயம் அவர்கள் மீது முத்து மழையாகப் பொழிந்து கொண்டிருந்தன. சற்றுத் தூரத்தில் படகுகள் வரிசை வரிசையாகப் பல்வகைப் பண்டங்களைச் சுமந்து கொண்டு கடலைக் கிழித்துக் கொண்டு சென்றன. அப்பண்டங்களைப் படகிலிருந்து இறக்கிப் பாய்மரம் விரித்து நின்ற பெரிய மரக் கலங்களில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.

“இரட்டை மண்டலப் படையெடுப்புக்காகச் சேகரித்து வைத்த பண்டங்களெல்லாம் இலங்கைக்குப் போக வேண்டியிருப்பதை நினைத்தால் என் நெஞ்சம் கொதிக்கிறது!” என்றான் பார்த்திபேந்திரன்.

“பின்னே என்ன செய்கிறது? சோழ நாட்டின் பொறுக்கி எடுத்த வீரர் படைகள் இலங்கையில் இருக்கின்றன. அவர்கள் போர்க்களங்களில் வெற்றி மேல் வெற்றி அடைந்து வருகிறார்கள். ஆயிரம் வருஷமாக இலங்கை அரசர்கள் வீற்றிருந்து அரசு புரிந்த அனுராதபுரத்தைக் கைப்பற்றி ஜயக்கொடி நாட்டியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட வீரர்கள் பட்டினி கிடந்து சாகும்படி விட்டுவிடுவதா?” என்றான் ஆதித்த கரிகாலன்.

“அப்படி விட வேண்டும் என்று யார் சொன்னார்கள்? உணவுப் பண்டங்கள் அனுப்ப வேண்டியதுதான். ஆனால் சோழ நாட்டிலிருந்து நாகப்பட்டினத் துறைமுகத்தில் ஏறிப் போக வேண்டும். அல்லது பாண்டிய நாட்டிலிருந்து சேதுக்கரையில் ஏற்றி அனுப்ப வேண்டும். இந்த வரண்ட தொண்டை மண்டலத்திலிருந்து போக வேண்டிய அவசியம் என்ன? அதிலும் நாம் வடக்கே படையெடுத்துச் செல்வதற்கு இதனால் தடை ஏற்படுமே என்பதை எண்ணிச் சொன்னேன்!” என்றான் பார்த்திபேந்திரன்.

“அதை நினைத்தால் எனக்கும் உள்ளம் கொதிக்கத்தான் கொதிக்கிறது. அந்தப் பாவி பழுவேட்டரையர்களின் நோக்கம் என்ன தான் என்று தெரியவில்லை. எத்தனை நாள் இதையெல்லாம் சகித்துக் கொண்டிருப்பது? தாத்தா! ஏன் இன்னும் பேசாமல் வாயை மூடிக் கொண்டிருக்கிறீர்கள்? ஏதாவது வாயைத் திறந்து சொல்லுங்கள்!” என்றான் கரிகாலன்.

“குழந்தாய்! இந்தக் கடல் அலைகள் ஓயாமல் ‘ஓ’ வென்று சத்தமிடுகின்றன. கடல் அலைகளோடு போட்டி போட்டுக் கொண்டு உன் தோழன் பார்த்திபேந்திரனும் கூச்சலிடுகிறான். இதற்கு நடுவில் நான் என்னமாய்ப் பேசுவது? எனக்கோ வயதாகித் தள்ளாமை வந்து விட்டது…!” என்றார் மலையமான் மிலாடுடையார்.

“பார்த்திபேந்திரா! சற்று நேரம் நீ சும்மா இரு. தாத்தா அவருடைய கருத்தைச் சொல்லட்டும்!” என்றான் ஆதித்த கரிகாலன்.

“இதோ வாயை மூடிக் கொண்டு விட்டேன். பாவம்! தாத்தா தள்ளாத வயதில் மலைக் கோட்டையிலிருந்து கீழே இறங்கி இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்திருக்கிறார். அவர் முன்னால் நான் வாயைத் திறக்கலாமா? இந்தக் கடலுக்குத் தான் கொஞ்சமும் புத்தியில்லை! ஓயாமல் இரைந்து கொண்டிருக்கிறது! இதை அடக்குவார் ஒருவரும் இல்லை. நம் மலை அரசரிடம் சமுத்திர ராஜனுக்குக் கொஞ்சமும் பயமில்லை போலிருக்கிறது!” என்றான் பார்த்திபேந்திரன்.

“தம்பி! பார்த்திபேந்திரா! அப்படியும் ஒரு காலம் இருந்தது. திருக்கோவலூர் மலையமான் என்ற பெயரைக் கேட்டு இந்தக் காசினியில் உள்ள அரசர்களெல்லாம் நடுநடுங்குவார்கள். இரட்டை மண்டலத்துச் சளுக்கர்களும், வல்லத்து வாண கோவரையர்களும், வைதும்பராயர்களும், கங்கர்களும், கொங்கர்களும் மலையமான் பெயரைக் கேட்டதுமே இடி முழக்கம் கேட்ட சர்ப்பத்தைப் போல் பொந்தில் ஒளிந்து கொள்வார்கள். சமுத்திர ராஜனும் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாகத்தான் இருப்பான். இந்த உடம்பு கொஞ்சம் தளர்ச்சி அடைந்ததும் இப்போது எல்லாரும் துள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். ஆயிரம் வருஷத்துப் பழங்குடியைச் சேர்ந்த என்னை நேற்றைக்கு மேற்கேயிருந்து வந்த பழுவேட்டரையர்கள் ஒழித்துவிடப் பார்க்கிறார்கள்! அது ஒரு நாளும் நடக்கப் போவதில்லை! கரிகாலா! பழுவேட்டரையர்களின் நோக்கம் இன்னதென்று தெரியவில்லை என்பதாகச் சற்று முன்னால் சொன்னாய் அல்லவா! அவர்களுடைய நோக்கம் இன்னதென்று நான் சொல்லுகிறேன், கேள்! உன்னையும் உன் சகோதரனையும் தனித் தனியே பலவீனப்படுத்துவதுதான் அவர்களுடைய நோக்கம். இலங்கையில் உன் தம்பி அருள்மொழி தோல்வி அடைய வேண்டும். அதனால் அவனுக்கு அவமானம் நேர வேண்டும். இங்கே உனக்கு உன் தம்பியின் பேரில் கோபம் ஏற்பட வேண்டும். நீங்கள் இரண்டு பேரும் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும். அதைப் பார்த்து இந்தக் கிழவன் வேதனைப் படவேண்டும்! இதுதான் அவர்களுடைய அந்தரங்க நோக்கம்…..” என்று மிலாடுடையார் ஆத்திரத்துடன் சொல்லி வருகையில் கரிகாலன் குறுக்கிட்டான்.

“இந்த நோக்கத்தில் அவர்கள் ஒரு நாளும் வெற்றி அடையப் போவதில்லை, தாத்தா! என் தம்பியையும் என்னையும் யாராகிலும் பிரிக்க முடியாது. அருள்மொழிக்காக நான் உயிரையும் விடுவேன். எனக்கு ஒவ்வொரு சமயம் தோன்றுகிறது; – கப்பல் ஏறி நானும் இலங்கைக்குப் போகலாமா என்று. அங்கே அவன் என்ன கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறானோ என்னமோ! நான் இங்கே சுகமாக உண்டு உடுத்து அரண்மனையில் தூங்கிக் கொண்டு காலங்கழிக்கிறேன். என் வாளும் வேலும் துருப்பிடித்துப் போகின்றன. ஒவ்வொரு கணமும் எனக்கு ஒரு யுகமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. இங்கு இருக்கவே பிடிக்கவில்லை. தாத்தா! சொல்லுங்கள்! இந்தப் பண்டங்கள் ஏற்றும் கப்பல்களில் ஒன்றில் ஏறி நானும் இலங்கைக்குப் போகட்டுமா?” என்று கேட்டான் கரிகாலன்.

“அரசே! அருமையான யோசனை! பல நாளாக நான் நினைத்துக் கொண்டிருந்ததைத் தாங்களும் சொல்லுகிறீர்கள். புறப்படலாம், வாருங்கள்! இதற்குத் தாத்தாவை யோசனை கேட்பதில் பயனில்லை. இவரைக் கேட்டால் ‘வேண்டாம் பொறு!’ என்றுதான் புத்திமதி சொல்லுவார்! நாளைக்கே நாம் புறப்படலாம். தொண்டை மண்டலப் படையில் பாதியை அழைத்துக் கொண்டு போகலாம். இலங்கை யுத்தத்தை ஒரு வழியாக முடித்துக் கொண்டு நேரே நாகப்பட்டினத்தில் வந்து இறங்கலாம். இறங்கித் தஞ்சாவூருக்குச் சென்று அந்தப் பழுவேட்டரையர்களை ஒரு கை பார்த்து விடலாம்…!” என்று பார்த்திபேந்திரன் பொறித்துக் கொட்டினான்.

“கரிகாலா! பார்த்தாயா? நான் முதலிலேயே என்ன சொன்னேன்? இவன் வாயை மூடிக் கொண்டிருந்தால் தான் நான் பேசுவேன் என்று சொல்லவில்லையா?”

“இதோ வாயை மூடிக் கொள்கிறேன், தாத்தா! நீங்கள் சொல்வதையெல்லாம் சொல்லி முடியுங்கள்!” என்று பார்த்திபேந்திரன் வாயைக் கையினால் பொத்திக் கொண்டான்.

“கரிகாலா! நீ வீராதி வீரன். உன்னைப் போன்ற பராக்கிரமசாலி இந்த வீரத் தமிழகத்திலே கூட அதிகம் பேர் பிறந்ததில்லை. என்னுடைய எண்பது பிராயத்துக்குள் நானும் எத்தனையோ பெரிய யுத்த களங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் எதிரிகளின் கூட்டத்தில் தன்னந்தனியே புகுந்து சென்று உன்னைப் போல் சண்டையிட்ட இன்னொரு வீரனைப் பார்த்ததில்லை. சேவூர்ப் பெரும்போர் நடந்தபோது உனக்குப் பிராயம் பதினாறு கூட ஆகவில்லை. அந்த வயதில் பகைவர்களின் கூட்டத்தில் நீ புகுந்து சென்ற வேகத்தையும், இடசாரி வலசாரியாக வாள் சுழன்ற வேகத்தையும், பகைவர்களின் தலைகள் உருண்ட வேகத்தையும் போல் நான் என்றும் பார்த்ததில்லை. இன்னும் என் கண் முன்னால் அந்தக் காட்சி நின்று கொண்டிருக்கிறது. உன்னைப் போலவே உன் சிநேகிதன் பார்த்திபேந்திரனும் வீராதி வீரன்தான். ஆனால் நீங்கள் இரண்டு பேரும் பதற்றக்காரர்கள்; முன்கோபம் உள்ளவர்கள். அதனால் உங்களுக்கு யோசிக்கும் சக்தி குறைந்து விடுகிறது. எது செய்ய வேண்டுமோ அதற்கு நேர்மாறான காரியத்தைச் செய்யத் தோன்றிவிடுகிறது….”

“தாத்தா! இம்மாதிரி உபதேசம் தாங்கள் இதற்கு முன் எத்தனையோ தடவை செய்திருக்கிறீர்கள்…”

“செய்திருக்கிறேன். ஆனால் ஒன்றும் பயன்படவில்லை என்கிறாயா? பேசாமல் என்னை ஊருக்குத் திரும்பிப் போகச் சொல்லுகிறாயா?”

“இல்லை, இல்லை! இப்போது நடக்க வேண்டிய காரியம் என்னவென்று சொல்லுங்கள்.”

“உன் சகோதரன் அருள்மொழியை உடனே இவ்விடத்துக்கு அழைத்துக் கொள்ள வேண்டும். நீயும் உன் சகோதரனும் பிரிந்திருக்கவே கூடாது…”

“தாத்தா! இது என்ன யோசனை? அருள்மொழி இங்கே வந்துவிட்டால் இலங்கை யுத்தம் என்ன ஆகிறது?”

“இலங்கை யுத்தம் இப்போது ஒரு கட்டத்திற்கு வந்திருக்கிறது, அனுராதபுரத்தைப் பிடித்தாகிவிட்டது. இனி அங்கே மழைக் காலம். இனி நாலு மாதத்திற்கு ஒன்றும் செய்ய முடியாது. பிடித்த இடத்தை விட்டுக் கொடாமல் பாதுகாத்து வர வேண்டியதுதான். இதை மற்ற தளபதிகள் செய்வார்கள். அருள்மொழி இச்சமயம் இங்கே இருக்க வேண்டியது மிகவும் அவசியம். கரிகாலா! உண்மையை மூடி மூடி வைப்பதில் பயன் என்ன? விஜயாலய சோழரின் குலத்துக்கும் அவர் அடிகோலிய சோழ சாம்ராஜ்யத்துக்கும் பேராபத்து வந்திருக்கிறது. நீயும் உன்னைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் இப்போது ஒரே இடத்தில் தங்கிச் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம்முடைய பலத்தையெல்லாம் திரட்டி வைத்துக் கொள்ளவும் வேண்டும். எப்போது என்ன விதமான அபாயம் வரும் என்று சொல்ல முடியாது…….

“தாத்தா! இது என்ன இப்படி என்னைப் பயமுறுத்துகிறீர்கள்? என் கையில் வாள் இருக்கும் வரையில் எனக்கு என்ன பயம்? எப்படிப்பட்ட அபாயம் வந்தால் தான் என்ன? தன்னந்தனியாக நின்று சமாளிப்பேன். எத்தகைய அபாயத்துக்கும் நான் பயப்படுகிறவன் அல்ல…..”

“பிள்ளாய்! நீ எப்படிப்பட்ட தைரியசாலி என்று எனக்குச் சொல்ல வேண்டுமா? ஆயினும், திருவள்ளுவர் பெருமான் சொல்லியிருப்பதையும் சில சமயம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

“அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்!” </div>

என்று அந்த மகான் சொல்லியிருக்கிறார். போர்க்களத்தில் பகைவர்களுக்கு எதிரெதிரே நின்று போரிடும் போது அச்சம் கூடாது. அப்படிப் பயப்படுகிறவன் கோழை. அவ்விதம் பயப்படுகிற பிள்ளை என் வம்சத்தில் பிறந்தால் அவனை நானே இந்தக் கிழடாய்ப் போன வலுவிழந்த கையினால் வெட்டிப் போட்டு விடுவேன். ஆனால் மறைவில் நடக்கிற சதிகளுக்கும் சூழ்ச்சிகளுக்கும் கண்ணுக்குத் தெரியாத அபாயங்களுக்கும் பயப்பட்டேயாக வேண்டும். பயப்பட்டு, அந்தந்த நிலைமைக்குத் தகுந்த முன் ஜாக்கிரதையும் செய்து கொள்ள வேண்டும். அரச குலத்தில் பிறந்து சிம்மாசனத்துக்கு உரியவர்கள் இது விஷயத்தில் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது. இருந்தால் நாட்டுக்கே நாசம் விளையும்.”

“தாத்தா! அப்படி என்ன இரகசிய அபாயங்களைத் தாங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? சற்று விளக்கமாகச் சொன்னால்தானே நாங்கள் ஜாக்கிரதையாயிருக்க முடியும்…?”

“சொல்லத்தான் வருகிறேன். சில நாளைக்கு முன்னால் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் அர்த்த ராத்திரி வேளையில் ஒரு கூட்டம் நடந்தது. அதற்குப் பெரிய பழுவேட்டரையர் வந்திருந்தார். இன்னும் தென்னவன் மழவராயர், குன்றத்தூர்க் கிழார், வணங்காமுடி முனையரையர், அஞ்சாத சிங்க முத்தரையர், இரட்டைக் குடை ராஜாளியார் – இவர்கள் எல்லாரும் வந்திருந்தார்களாம். என் காதுக்கு வந்தது இந்தப் பெயர்கள் தான். வேறு பலரும் வந்திருக்கலாம்……”

“வந்திருக்கட்டும்; அதனால் என்ன? எல்லாரும் நடுநிசி வரையில் கூத்தும் கேளிக்கையும் பார்த்துவிட்டு, வயிறு புடைக்கச் சாப்பிட்டு, அதற்கு மேல் மிடாமிடாவாய்க் கள்ளைக் குடித்து விட்டுத் தூங்கப் போயிருப்பார்கள். அதைப் பற்றி நமக்கு என்ன. நீங்கள் சொன்ன தாடி மீசை நரைத்த கிழடுகள் எல்லாம் கூடிப் பேசி என்ன புரட்டி விடுவார்கள்?”

“கிழடுகளைப் பற்றி உனக்கு இவ்வளவு நல்ல அபிப்பிராயம் இருக்கும் பட்சத்தில் நான் என்ன சொல்லி என்ன பயன்? நானும் ஒரு கிழவன் தானே? அவர்கள் எல்லாரையும் விடத் தொண்டு கிழவன் நான்..!”

“தாத்தா! கோபம் வேண்டாம். அந்தக் கையினாலாகாத கிழங்களோடு தங்களை நான் சேர்த்து விடுவேனா? சரி, அப்புறம் என்ன நடந்தது, சொல்லுங்கள்!”

“கையினால் ஆகாக் கிழங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறாய்! அவர்களில் தலைமைப் பெரிய கிழவன் கொஞ்ச நாளைக்கு முன்புதான் கலியாணம் செய்து கொண்டான் என்பதை மறந்து விடாதே! இளம் பெண்ணை மணந்த கிழவனைப் போல் உலகில் அபாயகரமான இளைஞன் யாரும் இல்லை என்பதையும் தெரிந்து கொள்!”

கிழவனின் கல்யாணத்தைப் பற்றிய பேச்சுத் தொடங்கியதும் ஆதித்த கரிகாலனுடைய முகத்தில் ஒரு விசித்திர மாறுதல் உண்டாகியது. அவனுடைய கண்கள் திடீரென்று சிவந்து இரத்த பலி கேட்கும் க்ஷூத்ர தேவதையைப் போல் விழித்தன. உதடுகள் துடிதுடித்தன. பற்கள் நறநறவென்று கடித்துக் கொண்டன.

இதையெல்லாம் மலையமான் கவனிக்கவில்லை. ஆனால் பார்த்திபேந்திரன் கவனித்துக் கொண்டான்.

“அந்தக் கலியாணப் பேச்சு இப்போது என்னத்துக்கு, ஐயா! சம்புவரையர் அரண்மனையில் அப்புறம் என்ன நடந்தது என்பதைச் சொல்லுங்கள்” என்றான் பல்லவ வீரன்.

“அதைத்தான் சொல்ல வந்தேன் ஆனால் வயதாகிவிட்டது அல்லவா? புத்தி தடுமாறி வேறு எங்கேயோ போய் விடுகிறேன்.கேள் கரிகாலா! பார்த்திபேந்திரா! நீயும் கேட்டுக் கொள்! அந்த நள்ளிரவுக் கூட்டம் கிழவர்களின் கூட்டம் மட்டும் அல்ல. சில வாலிபர்களும் அதில் இருந்தார்கள். ஒருவன் சம்புவரையன் மகன் கந்தமாறன். இன்னொருவன்…” என்று தயங்கினதைப் பார்த்து, “யார், தாத்தா? இன்னொருவன் யார்?’ என்று கரிகாலன் தூண்டிக் கேட்டான்.

“உன்னுடைய பெரிய பாட்டனார் கண்டராதித்தருடைய திருக்குமாரன், உன்னுடைய சித்தப்பன் – மதுராந்தகத் தேவன்தான்!”

இதைக் கேட்டதும் ஆதித்த கரிகாலனும் பார்த்திபேந்திரனும் கலகலவென்று சிரித்தார்கள்.

“இது என்ன சிரிப்பு! இந்தச் சிரிப்புக்குப் பொருள் என்ன? மறுபடியும் என்னைப் பரிகசிக்கிறீர்களா?” என்று மிலாடுடையார் கேட்டார்.

“இல்லை, தாத்தா! இல்லை! மதுராந்தகனைத் தாங்கள் ‘வாலிபன்’ என்கிறீர்களே? அதற்காகத்தான் சிரிக்கிறோம். அவன் கிழங்களிலேயெல்லாம் தொண்டுக் கிழடு அல்லவா? பழுத்த சிவஞானக் கிழடு அல்லவா?” என்றான் ஆதித்த கரிகாலன்.

“கிழவனுக்குச் சில சமயம் யௌவனம் திரும்பும் என்று நீ கேள்விப்பட்டது இல்லையா? அதுபோல் மதுராந்தகனுக்கும் இளமை திரும்பியிருக்கிறது. சில நாள் முன்பு வரையில் ‘துறவியாகப் போகிறேன்; சிவ கைங்கரியம் செய்யப் போகிறேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்தவன், ஒன்று, இரண்டு, மூன்று என்று கலியாணம் செய்து கொண்டு போகிறான் அல்லவா?…..”

“செய்து கொள்ளட்டும். இன்னும் பல கலியாணம் செய்து கொள்ளட்டும்; அதனால் என்ன?”

“தம்பி! மதுராந்தகனின் கலியாணங்கள் சாதாரண கலியாணங்கள் அல்ல. இராஜரீகக் கலியாணங்கள். பழுவேட்டரையர்களின் அந்தரங்க சூழ்ச்சியைச் சேர்ந்த கலியாணங்கள்…!”

“தாத்தா! இன்னும் எதற்காக மர்மமாகவே பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? விட்டுச் சொல்லுங்கள்! பழுவேட்டரையர்கள் என்னதான் விரும்புகிறார்கள்? ஊர் ஊராய்ச் சென்று அவர்கள் கூட்டம் போடுவதின் நோக்கம் என்ன? மதுராந்தகத் தேவனை வைத்துக் கொண்டு என்ன செய்யப் பார்க்கிறார்கள்?” என்று ஆதித்த கரிகாலன் கேட்டான்.

“வேறு ஒன்றும் இல்லை. உனக்கும் உன் தம்பிக்கும் இராஜ்ய உரிமை இல்லையென்று செய்துவிட்டு, மதுராந்தகனைச் சோழ நாட்டின் சிம்மாசனத்தில் ஏற்ற எண்ணியிருக்கிறார்கள். அதற்கு உன் தந்தையின் சம்மதத்தைப் பெறுவதற்காகவே அவரைத் தஞ்சைக் கோட்டையில் சிறையில் வைத்திருப்பது போல் வைத்திருக்கிறார்கள்!” என்றார் மிலாடுடையார்.





Write Your Comments or Suggestion...